Skip to main content

கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்



தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.
சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.

தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறூதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie

குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு -  எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும். குற்றம் கடிதல்  திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம்.  ஆனால் , ஆனால்  RTI file  பண்ணலாம் .. RTI  என்றால் என்ன ? RTI (right to information act)   -   RTI  தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம் 10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm  to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது , கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன் ( https://www.facebook.com/BalasubramaniE?fref=ts ) அவர்கள்  விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம் எழுதவும் பயிற்சி அளித்தார். RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான்...

எண் 54 பேருந்தும், நானும் (MTC Bus Driver with my Conversation)

'54'  பாரிஸ் இல் இருந்து பூந்தமல்லி  செல்லும் பேருந்தில் வழக்கம் போல் அலுவலுகம் சென்று மாலை பணி முடிந்து மறுபடி 54  பேருந்தில் வரும் போது பேருந்தில் நடந்த உரையாடல், அனுபவம் ..... எப்பொழுதும் கண்ணாடி கதவு போட்ட பேருந்தில் காலை சென்ட்ரல் சிக்னலில் கதவு திறந்து கூட்டம் ஏற்றி பிறகு சிறிது நேரம்  ஸ்டாண்ட் போட்டு பிறகு தான் வண்டி எடுப்பார்கள்.. ஆனால் பணி முடிந்து மாலை அதே சென்ட்ரல் சிக்னலில் வண்டி நிற்கும் போதும், fort ஸ்டேஷனலிலும் பெரும்பாலோர் கதவு திறக்கும் படி கேட்பார்கள், திட்டி  தீர்ப்பார்கள் ஆனாலும் கதவு திறக்க மாட்டார்கள்..  சில சமயம் கதவு திறப்பார்கள்.. அந்த மாதிரி சமயங்களில் கடைசியாக இறங்கும் போது ஏன், எதற்கு கதவு திறக்கவில்லை என பணிவாக ஓட்டுனரிடம் கேட்டுருக்கிறேன்.. ஆமாம் காலை திறக்கிறோம் மாலை இனிமேல் செய்கிறோம் என்றும், உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு  என்கிற பேச்சும் வாங்கியிருக்கிறேன்.. அனால் இன்று சந்தித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது.     ஓட்டுநர் அன்பும், நடத்துனர் ஆறுமுகமும் எங்களது உரையாடலும் .... உரையாடல் (அ...

வெறுக்கதகும் நகை கடை விளம்பரங்கள் - Disgusting Jewelry Shop Advertisements

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .  விளம்பரம் 1   "மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"   விளம்பரம் 2  "பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"   விளம்பரம் 3  "மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் ...