தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை. சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது. எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு. தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்